Wednesday 18 February 2009

தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு

எம்.ஜி.ஆர்., இந்திராகாந்தியின் கனவு, தமிழ் ஈழம்-அந்த தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்:சீமான் பேச்சு


இயக்குநர் சீமான் நேற்று இரவு பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சங்கம் நடத்திய இலங்கை தமிழர் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.


இரவு 7.30க்கு கூட்ட மேடைக்கு அவர் வந்தார். 9.15க்கு பேசத்தொடங்கிய அவர் 11.05க்கு தனது பேச்சை முடித்தார்.


இரண்டு மணிநேரமும் அவர் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தே பேசினார்.


’’நான் பிரபாகரனின் தம்பி. நான் தலைமறைவாகி ஓட மாட்டேன். நான்ஜெயிலுக்குப்போக வேண்டும் என்று சிலர் துடிக்கிறார்கள். நான் சிறைக்குப்போக அஞ்ச மாட்டேன். பதுங்கி இருந்தது நெல்லை சீமையில் பாயத்தான்! நான் எப்படியும் சாகப்போகிறேன். அது என் இனத்துக்காக என்றால் எனக்கு பெருமை தான்.



திருச்செந்தூர் வந்த மத்திய மந்திரி லல்லு பிரசாத்துக்கு ஒரு ஆட்டுக்குட்டி பரிசாக வழங்கினார்கள். அந்த ஆட்டுக்குட்டி தாயை பிரிந்து பால் குடிக்காமல் தவிப்பதை பார்த்து அதிகாரிகள் ஓடோடி வந்து ஆட்டுக்குட்டியின் தாயை பீகாருக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.


என்ன கரிசனம்..ஆட்டுக்குட்டி மீதுள்ள பாசம் கூட தமிழர்கள் மீது இல்லையே? அங்கே என் உறவுகள் சாவுகிறார்கள். தாயையும் தந்தையையும் பிரிந்து அனாதையாக அழுகிறார்கள். ஆட்டுக்குட்டியை ஒன்று சேர்த்தவர்கள் தமிழர்களை ஒன்று சேர்க்க முயற்சி எடுக்கவில்லையே.


அங்கே இருக்கும் உறவுகள் நம்மை நம்பி இருக்கிறார்கள். பிரபாகரன் நம் உயிரை கேட்கவில்லை. உணர்வை கேட்கிறார்.நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேனாம். எங்கே இருக்கிறது இறையாண்மை?


பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையை தாக்கியபோது, பாகிஸ்தான் மீது போர் தொடுக்க தயாரானார்கள். நமது கடல் எல்லையில் மீன்பிடித்த மீனவர்களை சிங்களர்கள் சுட்டுக்கொன்றார்கள். அப்போது யாருமே தட்டிக்கேட்க வில்லையே.


பாகிஸ்தானுடன் என்றால் கிரிக்கெட் விளையாடமாட்டார்கள். இலங்கையுடன் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். எங்கே இருக்கிறது இறையாண்மை.


ஜப்பான், ஒக்கனேக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடன் கொடுக்கிறது.அதை கொடுக்காதே என்று கர்நாடகாக்காரன் ஜப்பானுக்கு கடிதம் எழுதுகிறான். முல்லை பெரியாறு' காவிரியில் தண்ணீர் விட மறுக்கிறார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை.


தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றி பேசக்கூடாது என்றால் பிரபாகரனை எதிர்த்தும் பேசக்கூடாது. எதிர்த்து பேசுகிறவர்களை விட்டு விடுகிறார்கள். பிரபாகரன் பேட்டி கொடுத்தால் இந்தியா முழுவதும் செய்தி வருகிறது. அவரைப் பற்றி பேசினால் தடையா? இந்த தடையை உடைக்க வேண்டும்.


சினிமா படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகனின் உறவுகளை எதிரிகள் கொலை செய்வார்கள். கதாநாயகன் அதை கண்டு பிடித்து பழி வாங்கும் போது நாம் பாராட்டுகிறோம். ஒரு கற்பனை கதாபாத்திரம் செய்தால் பாராட்டும் நாம் அதை நிஜத்தில் செயல்படுத்துபவர்கள் தீவிரவாதிகளா?


இந்திரா காந்தியின் கனவு, எம்.ஜி.ஆரின் கனவு, தமிழ் ஈழம். அங்கே தமிழ் தாய்மார்களின் கருவை கலைக்கிறார்கள். உலகத்திற்கு உண்மைகளை கொண்டு செல்ல நான் பேசுகிறேன்.


நீங்கள் உணர்வை வாக்கு பதிவில் காட்டுங்கள். 40 தொகுதியில் வெற்றியை கொடுத்தோம். இனி 40 தொகுதியிலும் வீழ்த்துவோம். எந்த நாட்டிலும் சொந்த மக்களே அகதிகளாக இருந்ததில்லை. இலங்கையில் மட்டும் தான் இந்த அவலம்.


அங்கு தஞ்சம் புகுந்தவர்களை சிங்கள ராணுவம் மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள் கம்பி சிறைக்குள் அடைத்து பட்டினி போடுகிறது.


ஒரு இனம் செத்து மடிகிறது. எல்லாரும் அழுகிறார்கள். நான் கதறி அழுகிறேன். இதில் பிழை இல்லை. போரை நிறுத்தச் சொல்வது மனித உரிமை. போப் ஆண்டவர் போரை நிறுத்தச் சொல்கிறார்.


ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று பேசுபவர்கள், ராஜீவ்காந்தியின் பின் மண்டையை தாக்கிய சிங்கள ராணுவ வீரனை என்றாவது கண்டித்து பேசியது உண்டா?


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வக்கீல்கள், மாணவர்கள், மக்கள், திருநங்கைகள் என்று அனைத்துதரப்பினரும் போராட்டம் நடத்தி விட்டார்கள். இந்த மக்களை மதித்து ராணுவ உதவிகளை நிறுத்துங்கள். நமது ராணுவ வீரர்களை திருப்பி அழையுங்கள்.


மூன்று நாளில் பிரபாகரன் ஒட்டு மொத்த இலங்கையையே கைப்பற்றி விடுவார். இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் வேறு, விடுதலை புலிகள் வேறு அல்ல.


எல்லா நாட்டிலும் விடுதலையை அங்கீகரிக்கிறது ஐ.நா. சபை. -ஆனால் ஈழத்தமிழ் நாட்டை அங்கீகரிக்க மறுப்பது ஏன்? பிரபாகரன் சாவதற்கு முன் தமிழ் ஈழ நாடு உருவாகும். அது மொத்த இலங்கையாக கூட இருக்கலாம்.


இந்த எழுச்சி மோதல் களம் வரை இருக்கட்டும். வாக்கு கேட்க வருகிறவர்களிடம் உங்கள் உணர்ச்சியை காட்டுங்கள். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உதவுங்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

No comments:

Post a Comment